108 திவ்ய தேசங்கள்

மே 23, 2011

 

இன்று என்னுடைய முதல் வலை தோழி ஜானு ,அவருக்கு நான் போட்ட பின்னூட்டத்தை
பதிவாக போட்டு பெருமை படுத்தி இருக்கிறார் .,மகிழ்ச்சியாக இருக்கிறது
அவரின் அனுமதி பெற்று இங்கே ஷேர் செய்கிறேன்

காலையில் இது தொடர்பான மெயில் ஏதேனும் இருக்குமோ என்று பார்த்தால் .. என்ன ஸ்வீட் சர்ப்ரைஸ் ..!!!!

என்னுடைய தோழி ப்ரியா அவர்கள் பெரிய விருந்தை கொடுத்திருக்கிறார்கள் …! கிருஷ்ணரோட திவ்ய தேச விருந்து ..

நான் எள் என்று இவரால் கிட்ட சொன்னா போதும் ..இவங்க எண்ணையாய் வந்து நிற்கறாங்க ..இத்தனைக்கும் பார்த்துக் கொண்டது கூட இல்லை நாங்க .. சின்ன வயசில் பிசிராந்தையர் , கோப்பெரும் சோழன் கதை எல்லாம் படித்த போது இப்படியும் இருக்குமான்னு தோணும் .. பார்த்துக்காம எப்படி அப்படின்னு எல்லாம் கேள்விகள் தோணும் .. இப்ப எனக்கும் ஒரு நல்ல தோழி , அதுவும் நான் நல் வழியில் எப்பவும் இருக்கணும்னு அக்கறையோட பிரார்த்தனை பண்ணிக்கொள்கிற தோழி .. (இவங்களை ஆரம்பத்தில் நான் எப்படி எல்லாம் சந்தேகப் பட்டேன்னு நினைச்சால் எங்க ரெண்டு பேருக்குமே இப்ப சிரிப்பு வரும்னு நினைக்கிறேன் :) LOL )

சோ நம்ம ப்ரியா தி கிரேட் போடற கமெண்ட்ஸ் நான் எழுதற பதிவை விட சிறப்பா , பயனுள்ளதா இருக்கிறதால அவங்க பதிவு இரண்டையும் சாரி கமெண்ட்ஸ் இரண்டையும் இங்க பதிவா போட்டுடறேன் .. ஏன்னா, கமெண்ட்ஸ் என்றால்
கவனிக்கப் படாமல் போக வாய்ப்பு இருக்கு !

ப்ரியாவோட பதிவுகள் ….

*****************************

ஹரே கிருஷ்ணா

படித்தவுடன் கண் கலங்கினேன் ஜானு
என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை
எனினும் கிருஷ்ணர் உங்கள் பக்கம் இருக்கும் போது ,அவரே உங்களை வழி நடத்தி செல்வார் தானே…………….
எந்நேரமும் கடவுள் நினைவாகவே இருக்கும் நீங்கள் தான் அதிர்ஷ்ட சாலி ,திறமை சாலி ,பாக்கிய சாலி எல்லாம் :)
ஏதோ நீங்க பார்த்து இந்த மாதிரி பதிவுகளை பிரசாதமா கொடுத்தா தான் என்னை போன்றவர்கள்
கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடியும் ஜானு..

இதோ 108 தேசங்கள் சுருக்கமாக தர பட்டு உள்ளது .,

இதன் முழு விவரங்கள் இந்த லிங்க் இல் கிளிக் செய்து பெறலாம்

http://temple.dinamalar.com/KoilList.php?cat=8

ஒவ்வொரு கோவிலையும் கிளிக் செய்தால் அந்த கோவிலின்

விபரம்
செல்லும் வழி
மேப்
படங்கள்
அருகில் உள்ள கோயில்

முதலியவற்றை பெறலாம்

108 திவ்ய தேசம்

அருள்மிகு பிரகலாத வரதன் (அஹோபிலம்) திருக்கோயில், அஹோபிலம், கர்நூல்
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்
அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்
அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி
அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி
அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை, தூத்துக்குடி
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி
அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம், தூத்துக்குடி
அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில், திருதொலைவிலிமங்கலம், தூத்துக்குடி
அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி
அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்
அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி, பைசாபாத்
அருள்மிகு உத்தமர் திருக்கோயில், உத்தமர் கோவில், திருச்சி
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், அன்பில், திருச்சி
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோவிலடி, தஞ்சாவூர்
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்
அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்
அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன்கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர், நாகப்பட்டினம்
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி, நாகப்பட்டினம்
அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், திருவண்புருசோத்தமம், நாகப்பட்டினம்
அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்செய்கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், வைகுண்ட விண்ணகரம், நாகப்பட்டினம்
அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்
அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம்,அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, நாகப்பட்டினம்
அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், நாகப்பட்டினம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், நாகப்பட்டினம்
அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம், நாகப்பட்டினம்
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி, நாகப்பட்டினம்
அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்
அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்
அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருநீரகம், காஞ்சிபுரம்
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்
அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில், நிலாதிங்கள்துண்டம், காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திரு ஊரகம், காஞ்சிபுரம்
அருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருகாரகம், காஞ்சிபுரம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வானம், காஞ்சிபுரம்
அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில், திருபவளவண்ணம், காஞ்சிபுரம்
அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர்
அருள்மிகு வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர், திருவள்ளூர்
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, காஞ்சிபுரம்
அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம்
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர்
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய், மலப்புரம்
அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு, பாலக்காடு
அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை, எர்ணாகுளம்
அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், எர்ணாகுளம்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ், பந்தனம் திட்டா
அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம், கோட்டயம்
அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு, ஆழப்புழா
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர், ஆழப்புழா
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை, பந்தனம் திட்டா
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர், ஆழப்புழா
அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், திருவனந்தபுரம்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், கன்னியாகுமரி
அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி
அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர், தூத்துக்குடி
அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர், விருதுநகர்
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில், மதுரை
அருள்மிகு சவுமியநாராயணபெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர், சிவகங்கை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி, சித்தூர்

கடைசி இரண்டு கோவில்கள் இவை 

திருப்பாற்கடல் க்ஷீராப்திநாதன் – கடலமகள் நாச்சியார்
பரமபதம் பரமபதநாதன் – பெரியபிராட்டியார்

நீங்க சொல்லி தான் காஞ்சி புரத்தை சுற்றி
22 கோவில்களிருப்பதே எனக்கு தெரிந்தது !
இந்த மாத கடைசியில் ஆம்பூர் போகலாம் என்று இருக்கிறோம்
அப்படியே பிராப்தம் இருந்தால் ஒரு சில கோவில்களையாவது பார்த்து வர எண்ணம்
ஹரே கிருஷ்ணா..

*************************

ப்ரியாவுடன் உங்க எல்லோருக்கும் சேர்த்து சொல்லிகொள்வது .. எப்ப நமக்கு திவ்ய தேசங்கள் பத்தி எல்லாம் தெரிகிறது என்பது முக்கியம் இல்லை .. தெரிந்ததும் நாம என்ன பண்ணுகிறோம் என்பது தான் முக்கியம் ..பாருங்க ..நான் பெருசு பெருசாய் இப்படி எழுதணும் அப்படி எழுதனும்னு ஏதேதோ ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தாலும், தெரிந்த உடனேயே இவங்க எத்தனை ஆர்வமாய் , ஈடுபாடோட சிரத்தையாய் இங்கு எல்லோரும் பயன் பெறனும்னு தகவலை தெரிவித்து இருக்காங்க ..

இதுதான் பக்தர்களோட ஸ்பெஷாலிட்டி .. தான் நன்றாய் இருக்கணும்னு எண்ணாமல் மற்றவர்கள் நன்றாய் இருக்கணும்னு எண்ணுவார்கள் ..சோ எ பிக் ஹார்டி தேங்க்ஸ் டு பிரியா .. :)

Advertisements

ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 15

திசெம்பர் 30, 2010

 

 

பாடல் 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

 

பொருள்: “”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “”கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், “”உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், “”சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.””அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “”என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், “”நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

 

விளக்கம்: ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்!(ஹி ஹி !) இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

 ஆண்டாள்
அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்
சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற
விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக்
கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக்
கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை”
என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை
நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும்
வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி
இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல்
ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத
நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு
கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய
தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று
எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று
தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும்
முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி
பல நாள் நடந்தது.

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க
நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா?
எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார். அவர்
அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை. அன்றிரவு
எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை
சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச்
சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே
நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என
அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப்
பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும் மார்கழி
நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார்
திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார்.

மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு
மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக்
கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை
மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண
நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு
இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,
தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்
திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.  இவற்றுள்
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு
ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து
அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்
காணலானாள்.

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என
ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.
அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்
திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்
கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம்
சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்
பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்
சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்
உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.
ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட
பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை
பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை
அடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்
பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.
ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார்
வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால்
சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது
கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க
மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்
பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்
உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

     கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
     சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
     நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
     வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

     பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
     வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
     ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
     வையம் சுமப்பது வம்பு

     திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
       திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
       பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
       உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
       வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

 

 


ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 14

திசெம்பர் 30, 2010

    

பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 13

திசெம்பர் 30, 2010

   

 

பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்:கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?


ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 12

திசெம்பர் 30, 2010

 

 

பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 11

திசெம்பர் 30, 2010

 

 

பாடல் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்: நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


ஆண்டாளின் மார்கழி திருப்பாவை 10

திசெம்பர் 30, 2010

 

 

பாடல் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ
?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

 

பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

 

விளக்கம்: யாராவது நன்றாகத் தூங்கினால் “சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன “ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.