தேவை சிக்கனம்

நவம்பர் 3, 2011

சேமிப்புக் குணம்; சிக்கனம் ஆகியவை பற்றி நிறையப் பார்த்துவிட்டோம். ஆனாலும் அவ்வப்போது இந்த உணர்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.காரணம் செலவழிப்பதிலும், ஆடம்பர வசதிகளிலும் நம் மனம் அடிக்கடி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

செல்போன் இல்லாதவர்களைக் கண்டு செல்போன் இருப்பவர்கள் திருப்தி அடைவது இல்லை. லேட்டஸ்ட் மாடல் தேவை என்றோ, அவரைப்போல் இன்னொன்று வாங்கி வைத்துக் கொண்டால் அதில் மேலும் பல செளகரியங்கள் இருக்கின்றன என்றோ எண்ணிக்கொண்டு நிறைவற்ற மனத்துடன் வலம் வருகிறார்கள். ஏக்க உணர்வுடன் காலத்தை ஓட்டுகிறார்கள். ஒரு பலவீனமான கணத்தில் காசுதான் இருக்கிறதே, வாங்கினால் என்ன என்கிற நினைப்பு உந்தித் தள்ள விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகளாகி, சிறப்புச் சிறகுகளை இழந்து ஊர்ந்து செல்லும் சாதாரணப் பூச்சிகளாகிப் போகிறார்கள்.
 

கஷ்டப்பட்டவர், இன்று நன்றாக இருப்பவர் என்கிற நிலையில் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் பேசிப் பாருங்கள். பரவாயில்லை. ஆனாலும்… என்று ஒரு பட்டியல் வாசிப்பார்.

மனநிறைவு என்பது பொருள்களால் பொருளாதாரத்தால் மட்டும் நிரப்பிக் கொள்வது அல்ல. மனத்தாலும் நிரப்பிக்கொள்ள வேண்டும். 50 சதவிகிதத் தேவைகளை அடைந்துவிட்டால் மீதமிருக்கிற 50 சதவிகிதத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு ஏங்கித் தவிக்கிறவர்களின் வாழ்க்கை இனிய வாழ்க்கையல்ல. இந்த 50 சதவிகிதத்தை மனத்தால் நிரப்பிப் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேவைகள் பூதாகரமாகத் தெரியும். பிய்த்துத் தின்னும். அரித்துப் பிடுங்கும். இது தவறுகளைச் செய்வதற்கே வழிவகுக்கும். இருப்புகளைக் காலி செய்வதிலேயே நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள். எதிர்பாராத தேவைகளுக்கும், திடீர்ச் சமாளிப்புகளுக்கும் வருங்காலத்திற்கும் ஏதும் தேவை என்கிற நினைப்பை அதிகரித்துக் கொண்டால் நாமே வியக்குமளவு இருப்புகள் வளரும்.

ஒன்றை வாங்க மனம் துடித்தால் ஒரு வாரம் வரையிலாவது இந்த நினைப்பைத் தள்ளிப் பாருங்கள். அடுத்த வாரமும் இதே அளவு வேகமும் வீரியமும் இருப்பின், அதன் அவசியம் மற்றும் சாதக பாதகங்களை ஆராயுங்கள். இதை வாங்கியபிறகும் இருப்பு இருக்குமா பாருங்கள்.

செலவினங்கள் இனிப் பலன் தருபவையாக அமையட்டும். வேறு வகையில் சொன்னால் – வழித்துத் துடைத்து ஒன்றை வாங்குவது என்றால் அது முதலீடாகத்தான் இருக்கலாமே தவிர, செலவினமாக இருக்கக் கூடாது.

நன்றி : திரு லேனா தமிழ்வாணன்

 

Advertisements

இன்று என்பது கரன்ஸி போல!

ஜூன் 4, 2010
 

     வீட்டில் காலை   உணவு சாப்பிடும் போது வாகனம்,பெட்ரோல்  நிரப்பல், போக்குவரத்துச் சிக்கல் பற்றிய நினைப்புகள். போக்குவரத்தில் அலுவலக நினைப்புகள்; அலுவலகத்தில் வேறு ஏதோ  நினைப்புகள் என்றுதான் பலரது    பொழுதுகள் ஓடுகின்றன

  சாப்பிடும் போது அனுபவித்துச் சாப்பிடுவது இல்லை . ‘‘இன்று இட்டலி மல்லியப் பூவா இருக்கு. சாம்பார் சூப்பர் போ !’’ என்று நான்கு நல்வார்த்தைகள் சொல்லத் தோன்றாததற்குக் காரணம் நாம் அடுத்த நிமிடத்திற்குத் தாவிவிடுவதுதான்.  

  நடந்து  போகிறவர்களின், பேருந்திற்காகக் காத்திருப்பவர்களின் நிலைமையப் பார்க்கும்போது ஓரளவு நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நம் பயணம் எவ்வளவு சௌகரியமானது; இசை  கேட்டுக்கொண்டு    வசதியான காரில் போகும் இந்த நிலைக்காக நாம் எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்று அந்த நிமிடத்தை  அனுபவிப்பார்கள் எத்துணை பேர்  ?  

    சே   ! என்ன அவதிப்பா இந்தப் போக்குவரத்து? நிக்கிற சிக்னல் விழுந்தும் நகராமல் ஆள் ஏற்றுகிறதே   இந்த ஷேர் ஆட்டோ ?

இவர்களை எல்லாம்  கேட்பாரே கிடையாதா? என்று எரிச்சலால் இதயத்தை  நிரப்பிக் கொள்கிறவர்கள் கொஞ்சமா நஞ்சமா?  

  அலுவலகம் போனால் அந்த வேலைய, கடமைகளை  அனுபவித்துச் செய்யாமல் நாளைய சொந்த வேலைகளையும்  வாரக் கடைசி 

 இனிமைகைளயும் சுமந்துகொண்டு திரிந்தால் டோஸ்  விழாமல், லாஸ் வராமல் என்ன செய்யும்?

 

அப்புறம்? அப்புறம்? என்கிற நினைப்பால் அவதிதானே  தவிர வேறு  எதுவும் மிஞ்சாது. அடுத்த நிமிட அவதி வந்துவிட்டால் இந்த நிமிடத் தவறுகள் அதிகமாகிவிடும்.

 

  ஒருவன் சாதனை யாளனாக விரும்பினால் அவன் அந்த நிமிடமனிதனாக விளங்க வேண்டும். நாளை   என்பது செக்  போல .நேற்று  என்பது காலாவதியான லாட்டரி சீட்டுப் போல . இன்று என்பது கரன்ஸி போல . இந்த நிமிடம் என்ன செய்ய வேண்டுமோ , அது சரியாக நடந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  

நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளைய வெட்டும் முட்டாள் தனத்திற்கும் அடுத்த நிமிட நினைப்புடனே   வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும்  பெரிய வேறுபாடு இல்லை.

     

அடுத்த நிமிட நினைப்புக் கூடாது என்பதா? இது என்ன வறட்டு வாதம்? அப்படியானால் திட்டமிடல் என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்  விடுமே என்கிறவர்களுக்குச் சில வார்த்தைகள் .

  இந்த நிமிடக் கடமை  சரிவர நிகழ்கிறது என்கிற நிறைவு  முதலில் வரட்டும்.

 இதன்பிறகு அடுத்த நிமிடத்தைத் திட்டமிடலாம்.

 

  

திரு லேனா தமிழ் வாணன் அவர்களின் புத்தகத்தில் படித்தது.,அவருக்கு எங்களின் நன்றிகள்.